Monday, January 7, 2013

முடக்கத்தான் . . .

முடக்கத்தான் . . .

முடக்கத்தான் கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறுகொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும்.

ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.

கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும்.

அந்தக் காய்க்குள் மூன்று அறை உண்டு. ஒவ் வொரு அறைக் குள்ளும் ஒரு விதை வீதம் மூன்று அறைக்குள் மூன்று விதை இருக்கும். இந்த விதை நன்கு முற்றாத போது பச்சையாக உருண்டையாக இருக்கும். விதை நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும்.

ஒவ்வொரு விதையிலும் வெண்மை நிற அடையாளம் ஒன்றிருக்கும். இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.

இந்த முடக்கத்தான் முடக்குவாதத்தைப் போக்குகிறது. முடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதை கிராமத்து மக்கள் கீரையாகப் பயன்படுத்தி பல நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை :

இதன் இலைகளை சிறிது எடுத்து துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர, கை, கால் வலி, மூட்டுவலி தீரும். நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். தசை நாரும் நரம்பும் வலுப்பெறும்.

கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.

இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, மிளகு ரச மசாலுடன் தட்டிப் போட்டு ரசம் செய்து சாப்பிட்டு வர கீல்வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்கள் தீரும். மலச்சிக்கல் தீரும். வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

இதன் இலைகள் நான்கு விரல் அளவு எடுத்து, வெங்காயம் சிறிது கூடுதலாக நறுக்கிப்போட்டு, மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து சில நாட்கள் சாப்பிட்டு வர கழுத்துவலி, இடுப்பு வலி, முடக்குவாதம் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் சாப்பிட்டு வர, காசம், சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் தீரும்.

இதன் இலைகள் மூன்று விரல் அளவு எடுத்து, வெல்லம் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்டு வர, கண் வலி தீரும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பல குணமாகும்.

இதன் இலைகளைப் பாலுடன் சேர்த்து அரைத்து, கொப்புளங்களுக்குத் தடவி வர குணம் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை இடித்து, ஒரு பழகின மண்பானையில் இட்டு, அரைப்படி நீர் விட்டு அரைக் கால் படியாக சுண்டக்காய்ச்சி, வடி கட்டி ஒரு வேலைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டுவேளை மூன்று நாள் அருந்த நரம்புகள் சம்பந்தமான மேக வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

* முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

* முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

* இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

* துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

* முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

* இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டன்ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

* இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

* வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

* இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

* மூட்டு வாதமா? முடக்கற்றான் கீரையை சாப்பிடுங்கள். இது பலருக்கு தெரிந்த மூட்டு வாத அறிவுரை. பெயருக்கேற்ற செயல்பாடு உடையது முடக்கற்றான் (முடக்கு + அறுத்தான்) பழங்காலத்திலிருந்து மூட்டுவலி, மூட்டு பாதிப்புகளுக்கு கைமருந்தாக பயன்பட்டு வருகிறது.

* சித்த வைத்தியத்திலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும்.

* செடியின் வேர், இலை செடி முழுவதும் மருத்துவ பயன்களுடையவை.மூட்டுவாதம், மூட்டுவலி (ஆர்த்தரைடீஸ், ருமாடிஸம்) இவற்றுக்கு முடக்கற்றான் மூலிகையின் முக்கிய பயன், நோயால் முடங்கிப்போன முட்டிகளை மீண்டும் இயங்க வைக்கும்.

* கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கெல்லாம் முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.

* இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.

* இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.

* இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

* இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.

* முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

ஒரே இலையில் இத்தனை பயன்களா என்று வியப்பாக இருக்கிறதா, வியப்பதோடு நிறுத்தி விடாதீர்கள் அதன் பயனை அனுபவியுங்கள்.

Thursday, January 3, 2013

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி


மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!
-தாரகா-

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-ஆசான் தேரையர்-

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.