வறுமைக்கோடு என்றால் என்ன என்று சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்பியது. அதற்கு திட்டக் கமிஷன், "நாள் ஒன்றுக்கு நகர்ப்புறத்தில் ரூ.32, ஊரகப் பகுதியில் ரூ.26-க்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்' என்று விளக்கம் அளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. விற்கும் விலைவாசியில் இந்தப் பணத்தில் மனிதன் உயிர்வாழ முடியுமா? இதென்ன அபத்தம்? இந்தப் புள்ளிவிவரம், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் உட்கார்ந்து எழுதுபவர்களால் தரப்படுகின்றது என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுந்தன.இப்போது திட்டக் கமிஷன் வறுமைக்கோடு குறித்து வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. அதாவது, நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் ரூ.28.65-க்கு கீழாகவும், கிராமப்புறத்தில் ரூ.22.42-க்கு கீழாகவும் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். அதாவது, நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்தை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பம் என்று வரையறை செய்ய, அந்தக் குடும்பத்தின் ஒரு நாள் வருவாய், நகர்ப்புறத்தில் ரூ.114-க்கு (மாதம் ரூ.3,420) குறைவாகவும், கிராமப்புறத்தில் ரூ.90-க்கு (மாதம் ரூ.2,700) குறைவாகவும் இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்று கொள்ளலாம். இது ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்த வருவாயைக் காட்டிலும் மிகவும் குறைவு. ஆகவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளி செய்தார்கள்.திட்டக் கமிஷன் சொல்லும் அளவீடு கேலிக்கூத்து என்றால் அதைவிடப் பெரிய கேலிக்கூத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடையது. இவர்களுக்கு வறுமை என்றால் என்னவென்று தெரியாது. இவர்களுக்கு வாக்குகளும் அதன் விலையும் மட்டும்தான் தெரியும். இவர்களில் சிலரது ஆண்டு வருமானம் பல கோடிகள் என்றால், ஏனைய பலரின் மாத வருமானம் சில லட்சங்கள். ஒருவேளை, இவ்வளவு குறைந்த பணத்தில் உயிர்வாழும் ஒரு வாக்காளரின் வாக்குக்கு ஏன் ஆயிரக்கணக்கில் விலை என்ற சுயகேள்வியால் எழுந்த கோபமாகவும்கூட இருக்கலாம், இந்தக் கூச்சலும் குழப்பமும்!இந்தியாவில் 2004-05-ம் ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 37.2%. இந்த அளவு 2010-11-ம் ஆண்டில் 29.8% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. அப்படியானால் இவர்கள் அதிகம் சம்பாதிக்கும் நிலைமை உருவாகியிருக்க வேண்டுமே? ஒரு குடும்பத்தின் வருவாய் கூடியிருக்க வேண்டுமே? ஆனால், திட்டக் கமிஷன் வறுமைக்கோட்டுக்கான வருமான அளவை மேலும் குறைக்கின்றது. இது எளிதில் புரியாத பொருளாதாரப் புதிர்.இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் எண்ணிக்கை 29.4% லிருந்து 17.1% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, பல லட்சம் குடும்பங்களின் மாத வருமானம் உயர்ந்திருக்கிறது. எந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியும்? 2009-10-ம் ஆண்டில் தமிழகத்தின் சராசரி (வறுமைக்கோடு நிர்ணயிக்கும்) தனிநபர் வருவாய் கிராமப்புறத்தில் ரூ.639, நகர்ப்புறத்தில் ரூ.800. இவை வெறும் புள்ளிவிவரங்கள்.ஒரு மனிதன் அரசு தரும் அத்தனை சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, விலையில்லா அரிசி, அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை, அரசின் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெறுதல், அரசுப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்கவைத்தல், ஒரு விளக்கு திட்டத்தில் வீட்டுக்கு இலவச மின்சாரம் பெறுதல் போன்ற அத்தனை சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, இந்தக் குறைந்த வருமானத்தில் வாழ்கிறார் என்பதுதான் இந்தப் புள்ளிவிவரம்.தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்குச் செலவிடப்படும் தொகை ரூ.6 மட்டுமே. இந்த திட்டத்திலும் உணவுத் தானியங்கள் திருடு போகவும் செய்கின்றன. அதன் பிறகும் இந்த ஆறு ரூபாயில், 478 கலோரி, 15.26 கிராம் புரோட்டீன் உள்ள உணவுகளை வழங்குகிறார்கள். இதுபோன்று ஒரு தனிநபர் தனது குழந்தைக்கு வெறும் ரூ.6 கொடுத்து மதிய உணவைப் பெற்றுத்தர முடியுமா? தேநீர்கூட வாங்கித் தர முடியாது. ஓர் அரசு ஒட்டுமொத்தமாகச் செய்வதற்கும், ஒரு தனிநபர் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கவே செய்யும்.தமிழக அரசின் கடைநிலை ஊழியரின் மாதச் சம்பளம் ரூ.5,299 என்றால், அவருக்கான வாடகைப்படி சென்னை பெருநகரில் ரூ.500, மாநகராட்சியில் ரூ.300, நகராட்சியில் ரூ.200. இந்த வாடகைப் படிக்கும் அவர் கொடுக்கும் வாடகைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? சிறு நகரங்களில்கூட வாடகை உயர்ந்துவிட்டது. குறைந்தது ரூ.3,000 வாடகை கொடுத்தாக வேண்டும். அதை அவர் எப்படிக் கொடுக்கிறார் என்பது சராசரி வாக்காளருக்குக் கூடத் தெரிந்த உண்மை.இந்தியாவை ஒட்டுமொத்தமாகப் பார்த்து, அரசின் சலுகைகளைக் கழித்துக் கணக்கிடும் திட்டக் கமிஷனின் வெறும் புள்ளிவிவரத்துக்காகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முறையற்ற வழிகளில் வருமானம் தேடுவதிலும், தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவிடுவதிலும் ஊழல் செய்வோரை அம்பலப்படுத்துவதிலும் முனைப்புக் காட்டினாலே போதும். இந்தியாவில் அனைவரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். கம்பன் சொல்வதுபோல கொடுப்பார் இல்லை, கொள்வார் இல்லையால் என்ற நிலைமையை உருவாக்க வேண்டியவர்கள் வெறும் புள்ளிவிவரத்துக்காக கூச்சல் போடுவானேன்?
No comments:
Post a Comment